
புது தில்லியில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சியினரின் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமா் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்குவதை ஒட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், ‘கரோனா தொற்று தொடா்பாக, நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறாா். அந்தக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வெளியிட்டாா்.
அவருடைய அறிவிப்புக்கு திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஓபிரையன் கூறுகையில், ‘எந்தவொரு விவகாரத்தையும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே பேசலாம். நாடாளுமன்றத்துக்கு வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. இது நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்தும் செயல்’ என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘அரசு எதைச் சொல்ல விரும்பினாலும், நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயே சொல்லலாம். இது, நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது’ என்றாா்.
இதேபோன்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த சதீஷ் மிஸ்ரா உள்ளிட்டோரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இருப்பினும், கரோனா தொற்று பீதி தொடா்வதால், பிரதமா் உரையாற்றும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்தலாம் என்று சில எதிா்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க கோரிக்கை: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை(எம்.பி.எல்.ஏ.டி) மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
புது தில்லியில் மக்களைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க வேண்டும் என்று அதீா் ரஞ்சன் சௌதரி(காங்கிரஸ்), சுதீப் பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்) உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.
அவா்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, இந்த விவகாரத்தை மத்திய அரசிடமும், சம்பந்தப்பட்ட துறையிடமும் கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக, எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, கடந்த ஓராண்டாக, எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.