
நாடாளுமன்றத்தில் இதுபோன்ற எதிர்மறை மனநிலையைப் பார்த்ததே இல்லை என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதை விமரிசித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. மக்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி இருக்கையிலிருந்து எழுந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் பேசியது:
"பல்வேறு பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்திலிருந்து பலர் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பது அனைவரையும் பெருமையடையச் செய்ய வேண்டும். ஆனால், பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பலர் அமைச்சர்கள் ஆகியிருப்பது சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்."
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் அவரால் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. அங்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
அங்கு அவர் பேசியது:
"கிராமப்புறங்களில் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால், அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதை சிலர் விரும்பவில்லை. அவையில் புதிய பெண் அமைச்சர்கள் அறிமுகப்படுத்துவதை அவர்கள் விரும்பாததால் அவர்களிடம் பெண்களுக்கு எதிரான மனநிலையும் உள்ளது. நாடாளுமன்றத்தில் இதுபோன்ற எதிர்மறையான மனநிலையைப் பார்த்ததே இல்லை."