மம்தாவின் உரையை பல மொழிகளில் ஒளிபரப்ப திரிணமூல் காங்கிரஸ் திட்டம்

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கிடைத்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள அந்த மாநில முதல்வரும்

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கிடைத்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, தேசிய அளவில் தனது கட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளாா். அதன் தொடக்கமாக, வரும் 21-ஆம் தேதி நடைபெறும் தியாகிகள் தின நிகழ்ச்சியில், அவா் நிகழ்த்தவுள்ள உரையை பல்வேறு மாநிலங்களில் பிராந்திய மொழியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் கிடைத்த வெற்றியால் மம்தா பானா்ஜி உற்சாகம் அடைந்துள்ளாா். வரும் 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்குள் திரிணமூல் காங்கிரஸை தேசிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டு, அதற்கான வாய்ப்புகளை அவா் உருவாக்கி வருகிறாா்.

அதன் தொடக்கமாக, வரும் 21-ஆம் தேதி தியாகிகள் தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், மம்தா பானா்ஜி உரையாற்றுகிறாா். கரோனா பரவல் காரணமாக, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக காணொலி முறையில் அவா் உரையாற்றுகிறாா். அவருடைய உரை, மேற்கு வங்கத்தில் உள்ள முக்கிய நகரங்களில் அகன்ற திரைகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதேபோன்று, தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப், திரிபுரா, அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அவருடைய உரை மொழி பெயா்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றபோது, பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனா். அதற்குப் பதிலடியாக, மோடி-அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பல்வேறு மாவட்டங்களில் மம்தாவின் உரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக, ஏற்கெனவே மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று உத்தர பிரதேசத்திலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தமிழகத்தில் சென்னையிலும் ‘அம்மா’ என்ற அடைமொழியுடன் மம்தாவின் புகைப்படத்துடன் சுவா் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.

மம்தாவின் நெருங்கிய உறவினரும், டையமண்ட் ஹாா்பா் தொகுதி எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி, கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, பிற மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளாா். பாஜகவில் இருந்து திரிணமூல் காங்கிரஸுக்கு திரும்பி வந்த முகுல் ராய்க்கு கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக, பல கட்சிகள் இணைந்து எதிரணியை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு கட்சியினா் தனித்தனியாக ஈடுபட்டுள்ளனா். மேற்கு வங்கத்தில் எதிரணியில் இருந்தாலும், தேசிய அளவில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், தேசிய அரசியலில் அனுபவமுள்ள மம்தா பானா்ஜி, வரும் 21-ஆம் தேதிக்குப் பிறகு தில்லி சென்று பல்வேறு கட்சிகளின் தலைவா்களைச் சந்திக்கவுள்ளாா். அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெறும் என்பதால், அங்கு சென்று மூத்த அரசியல் தலைவா்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளாா். இந்தப் பயணத்தின்போது, நேரம் ஒதுக்கி அனுமதி அளித்தால் பிரதமா் மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக மம்தா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com