
பூனையல்ல.. புலி: நல்ல பாம்பு முன் கம்பீரமாக நின்று உரிமையாளரைக் காத்த செல்லப்பிராணி
புவனேஸ்வரம்: பூனையும், நாயும் மனிதர்களின் நண்பர்கள் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவேனஸ்வரத்தில், வீட்டுக்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை தடுத்து நிறுத்தி, உரிமையாளரின் குடும்பத்தினரைக் காத்துள்ளது செல்லப் பிராணியான பூனை.
பீமாதாங்கி என்ற பகுதியில் வசித்து வரும் சம்பத் குமார், ஒரு பூனையை வளர்த்து வருகிறார். அதன் பெயர் சின்னு. அங்கும் இங்கும் வாலையாட்டிக் கொண்டு சுற்றித் திரியும் அந்த பூனை, திடீரென, தனது வீட்டின் பின்புறம் பாய்ந்தோடியது.
இதையும் படிக்கலாமே.. இப்படி ஏமாந்தால் எப்படி? என்னதான் செய்யும் காவல்துறை?
இதைப் பார்த்த சம்பத், பூனை இப்படி வேகமாக ஓடுவது ஏனென்று அறிய அதனைப் பின்தொடர்ந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரது நெஞ்சைப் பிளக்கச் செய்வதாக இருந்தது. சுமார் நான்கு அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு ஒன்று வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. என்னசெய்வதென்று தெரியாமல் சம்பத் அதிர்ச்சியில் உறைய, அந்த குட்டிப் பூனையோ, நல்ல பாம்பின் பாதையை வழிமறித்து, கம்பீரமாக நின்று கொண்டது. அந்த பாம்பால், பூனையை எதிர்த்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. கடிக்கப் போவதாக பாம்பு மிரட்டினாலும், ஒரு அடி கூட பூனை பின்வாங்கவில்லை. இந்தப் போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
இதைப் பார்த்த சம்பத் உடனடியாக பாம்புகள் மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டார். சமூக ஆர்வலரான அருண் குமார் உடனடியாக வந்து, பூனையை பத்திரமாக வீட்டுக்குள் அனுப்பி விட்டு, வீட்டுக்குள் நுழையக் காத்திருந்த நல்ல பாம்பை பிடித்துவிட்டார்.
நான் வரும் வரை அந்த நல்ல பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் அரணாக நின்று காத்திருக்கிறது அந்தப் பூனை. இப்படியே அது 30 நிமிடங்கள் நல்ல பாம்பை எதிர்கொண்டு ஒரு போராளி போல நின்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார் அருண்.
அதேவேளையில், பூனையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து, பூனைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இதுபோல குர்தா மாவட்டத்தில், வீட்டுக்குள் நுழைய முயன்ற விஷ நாகத்திடம் கடிபட்டு, தனது உரிமையாளர்களுக்காக உயிரை விட்டது நினைவிருக்கலாம்.
பொதுவாக ஒரு நல்ல பாம்பு பூனையைக் கடித்துக் கொல்லும் திறன் பெற்றதுதான். ஆனால், பூனையின் அந்த தீரம்தான் நல்ல பாம்பை கொத்த விடாமல் செய்திருக்கிறது என்கிறார் பாம்புகள் உதவி மையத்தின் பொதுச் செயலாளர் மாலிக்.