
கோப்புப்படம்
பெகாஸஸ் விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் தொடங்கி அரசின் உயர் அலுவலர்கள் வரை பலர் வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்துள்ளார்கள் என தி வயர் உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர், மூத்த அமலாக்கத்துறை அலுவலர் ராஜேஷ்வர் சிங் ஆகியோர் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளார்கள் என தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
ராஜேஷ்வர் சிங்கின் இரண்டு எண்கள் மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களின் எண்களும் பெகாஸஸ் நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளரிடம் இருந்துள்ளது தி வயர் இணையதளம் மேற்கொண்ட புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
2ஜி அலைக்கற்றை, ஏர்செல் மேக்சிஸ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் உள்ளிட்ட பல வழக்குகளின் விசாரணையை சிங் மேற்கொண்டுள்ளார்.
கேஜ்ரிவாலின் தனிச் செயலராக இருந்த வி.கே.ஜெயின், பிரதமர் அலுவலக உயர் அதிகாரி, நிதி ஆயோக் அலுவலர் ஆகியோரின் எண்களும் என்எஸ்ஒ நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளரிடம் இருந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, கேஜ்ரிவாலின் தனிச் செயலாளராக ஜெயின் இருந்தபோது, அவர் வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில்தான் கல்வித்துறை, சுகாதார உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் கேஜ்ரிவாலின் புகழ்பெற்ற மக்கள் நல திட்டங்களை அவர் மேற்பார்வையிட்டார்.