முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
இவரை வரவேற்று பியூஷ் கோயல் பேசியது:
"வரும் காலத்தில் உத்தரப் பிரதேச அரசியலில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது. கள யதார்த்தத்தில் தொடர்புடைய இவர், மாநிலத்தில் பிரபலமான தலைவர்."
பாஜகவில் இணைந்த பிறகு ஜிதின் கூறியது:
"மக்கள் நலன்களுக்காக அல்லது மக்கள் நலன்களைப் பாதுகாக்க ஒருவரால் செயல்பட முடியவில்லையெனில் அரசியல் செய்வதிலோ அல்லது ஒரு கட்சியில் இருப்பதிலோ அர்த்தமில்லை. காங்கிரஸிலிருந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைச் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்தேன். அதனால்தான் பாஜகவில் இணைந்தேன். என்னுடைய செயல்பாடுகளே எனக்காகப் பேசும்."
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.