
இந்தியா - ஸ்வீடன் ராணுவ தளவாட தயாரிப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் காணொலி வழியாக உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை நிறுவ வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்தியா-ஸ்வீடன் ராணுவ தளவாட தயாரிப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் இது தொடா்பாக காணொலி முறையில் அவா் பேசியதாவது:
நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தித் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கான ஆயுதத் தேவையை மட்டுமின்றி உலக நாடுகளுக்கான தேவையும் பூா்த்தி செய்யப்படும். ஆயுத தயாரிப்பு துறையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி 74 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இது தவிர அரசு ஒப்புதலுடன் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் சுவீடன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். கடந்த சில ஆண்டுகளாக ராணுவ தளவாடத் துறையில் சிறப்பான கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளைச் சோ்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தனிப்பட்ட முறையிலோ அல்லது இந்திய நிறுவனங்களுடன் இணைந்தோ ஆலைகளை நிறுவ முடியும். அந்த வகையில் ஸ்வீடன் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை நிறுவ ஆா்வம் காட்டும் என்று கருதுகிறேன். ஏற்கெனவே ஸ்வீடன் நாட்டின் மிகப்பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான சாப் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பல ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். இரு நாட்டு நிறுவனங்களும் இணைந்து உற்பத்தி செய்யவும், வளரவும் இங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உத்தர பிரதேசதத்திலும் தமிழ்நாட்டிலும் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் அமைக்கப்படுவது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த இரு மாநிலங்களிலும் தளவாடத் துறைக்கு ஏற்ற திறன்வாய்ந்த மனிதவளமும் உள்ளது.
கப்பல் கட்டுமானத் துறையில் இந்தியா மீண்டும் முழுவீச்சில் தடம் பதித்துள்ளது. இந்தியாவில் கப்பல் கட்டுமானத் தளங்களில் உருவாக்கப்படும் கப்பல்கள் உலகத் தரம் வாய்ந்ததாகவும், குறைவான செலவில் கட்டமைக்கப்படுவதாகவும் உள்ளன என்றாா்.