
சத்தீஸ்கர்: பாஜக எம்.பி.யின் கிரெடிட் கார்டிலேயே மோசடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் கிரெடிட் கார்ட் மோசடியால் பாஜக எம்.பி. ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம்விசார் நேதம். இவர் அந்த மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமாவார்.
நேதம் பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டின் பயன்பாட்டுக் காலம் 2020ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. அவர் அதனை உடைத்து எறிந்துவிட்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டார்.
ஆனால், அவரது புதுப்பிக்கப்பட்ட கிரெடிட் கார்டை உருவாக்கிய மோசடியாளர்கள், அதன் மூலம் ரூ.37 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, வங்கியிலிருந்து நேதமுக்கு தொலைபேசி மூலம் அழைத்த வங்கி ஊழியர், கிரெடிட் கார்டைப் பயன்படுத்திய ரூ.37 ஆயிரத்தை எடுத்ததற்கு, வட்டி மற்றும் வரி சேர்த்து ரூ.45,667ஐ செலுத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால், தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லை என்றும், அதுபோன்ற எந்த பணப்பரிமாற்றத்தையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் வங்கித் தரப்பிலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்பு வந்ததால், அவர் சார்பில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.