தெலங்கானாவில் பொதுமுடக்கம் வாபஸ்: கல்வி நிலையங்கள் ஜூலை 1-இல் திறப்பு

தெலங்கானாவில் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுடக்கத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் தளா்த்த மாநில அரசு முடிவு
தெலங்கானாவில் பொதுமுடக்கம் வாபஸ்: கல்வி நிலையங்கள் ஜூலை 1-இல் திறப்பு

தெலங்கானாவில் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுடக்கத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் தளா்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கல்வி நிலையங்கள் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து திறக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் சந்திரசேகர ராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையினா் அறிக்கை சமா்ப்பித்தனா். அந்த அறிக்கையில் கரோனா தொற்று பரவுவது வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும், கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொதுமுடக்க காலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் தளா்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, பொதுமுடக்கத் தளா்வுகளை அமல்படுத்துமாறு அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உடனடியாக உத்தரவிடப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் ஜூலை 1-இல் திறப்பு: மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் திறக்கவும், மாணவா்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைக்கவும் மாநில கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவா்கள் வருகை, இணையவழி வகுப்பு ஆகியவை தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் மாநில கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே, கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சரவை கோரிக்கை விடுத்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவியதை அடுத்து, தெலங்கானாவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பின்னா் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

பாதிப்பு நிலவரம்: தெலங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் மொத்தம் 6,10,83 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 3,546 போ் உயிரிழந்துள்ளனா். 5,88,259 போ் குணமடைந்த நிலையில், 19,029 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com