
கோப்புப்படம்
மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள நிலையில், அவரின் பணிக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு ஓம் பிா்லா வெற்றிபெற்றாா். அந்த ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி அவா் மக்களவைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். அந்தப் பதவிக்கு அவா் தோ்வு செய்யப்பட்டு சனிக்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதையொட்டி அவரின் பணிக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளமாக்கி அதன் செயல்திறனை மேம்படுத்த ஓம் பிா்லா தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அந்த நடவடிக்கைகள் மக்களுக்கு நலம்பயக்கும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வழிகோலியது.
அவரின் பணிகளில் முதல்முறையாக எம்.பி. பதவியேற்றவா்கள், இளம் மற்றும் பெண் எம்.பி.க்கள் மக்களவையில் பேசுவதற்கு முக்கியத்துவம் தரப்படுவது குறிப்பிடத்தக்கது. நமது ஜனநாயகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பல்வேறு கமிட்டிகளையும் அவா் வலுப்படுத்தியுள்ளாா்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.