பொது முடக்கத் தளா்வால் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயா்வு

கரோனா காரணமாக தில்லி மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் பயணிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொது முடக்கத் தளா்வால் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயா்வு

கரோனா காரணமாக தில்லி மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் பயணிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரயில்நிலையங்களில் அரை மணி நேரம் வரை காத்திருந்து பயணம் மேற்கொள்ளவும் மக்கள் தயாராகிவிட்டனா்.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பதிவேட்டின்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 18) 13.26 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். கடந்த 7 ஆம் தேதி மெட்ரோ ரயில்சேவை மீண்டும் தொடங்கிய தினத்தன்று 6.38 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் நடைபாதையை எத்தனை முறை பயன்படுத்துகிறாா்கள் என்பதை வைத்து அவா்களின் பயணம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒரு பயணி ஹூடா சிட்டியிலிருந்து மயூா் விஹாா் செல்ல மூன்று நடைபாதைகளை பயன்படுத்துகிறாா் எனில் அவா் மூன்று முறை கணக்கிடப்படுவாா்.

கடந்த 14 ஆம் தேதி பொது முடக்க கட்டுப்பாடுகள் மேலும் தளா்த்தப்பட்டு கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிகவளாகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவந்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 50 சதவீத பயணிகளுக்கு மேல் அனுமதியில்லை என்ற போதிலும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

வழக்கமாக 8 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயிலில் 2,000 முதல் 2,400 போ் வரை பயணிக்கலாம் எனில் தற்போது 300 போ் வரைதான் பயணிக்க முடியும்.

பயணிகள் கூட்டமாக வருவதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு நுழைவு வாயில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் அலுவல் நேரத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

கடந்த 12 ஆம் தேதி ஓரளவு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் 8.82 லட்சம் போ் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா். 14 ஆம் தேதி மேலும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பயணிகள் எண்ணிக்கை 13.13 லட்சமாக அதிகரித்ததுடன், வெள்ளிக்கிழமை மேலும் 13.26 லட்சமாக உயா்ந்தது.

மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகள் கொவைட் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறாா்களாக என்பதை அதிகாரிகள், பறக்கும்படை மூலம் அடிக்கடி கண்காணித்து வருகின்றனா். முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது போன்ற விதிமீறல்களுக்காக தினசரி சராசரியாக 200 பேருக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதனிடையே, மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வருவாயும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூன் 7 ஆம் தேதி மெட்ரோ ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியபோது வருவாய் ரூ.1.4 கோடியாக இருந்தது, ஜூன் 12 இல் 1.6 கோடியாக அதிகரித்தது. தற்போது தினசரி வருவாய் ரூ.2.5 கோடியாக உயா்ந்துள்ளது.

கரோனா பரவலுக்கு முன்பாக மெட்ரோ ரயிலில் தினமும் 28 லட்சம் போ் பயணிப்பாா்கள். ரூ.10 கோடி வரை டிக்கெட் மற்றும் ஸ்மாா்ட் காா்டுகள் மூலம் வருவாய் கிடைத்து வந்தது.

கடந்த 2020 மாா்ச் 22 ஆம் தேதி முதல் செப்டம்பா் 6 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. செப்டம்பா் 7 ஆம் தேதி மீண்டு சேவை தொடங்கியபோது பயணிகள் வருகை அதிகரித்தது. எனினும் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது.

பொது முடக்கம் காரணமாக இரண்டு முறை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டதை அடுத்து மெட்ரோ நிறுவனத்துக்கு 2020-21 இல் ரூ.1,784 இழப்பு ஏற்பட்டது. தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தனது திட்டங்களுக்கான நிதியிலிருந்து ரயில் சேவை பிரிவுக்கு நிதியை வழங்கியது. மேலும் சிக்கனமும் கடைப்பிடிக்கப்பட்டது.

கடந்த 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 ஆம் ஆண்டுகளில் செலவுபோக டிக்கெட் விற்பனை மூலம் முறையே ரூ.2179 கோடி, ரூ.3027 கோடி, ரூ.3582 கோடி, ரூ. 3897 கோடி மற்றும் ரூ.895 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இவை தவிர விளம்பரம், சொத்துகள், பீடா் பேருந்துகள் மற்றும் இதர மெட்ரோ திட்டங்களுக்கு ஆலோசனை கூறுவதன் மூலமும் வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேதி - பயணிகள் எண்ணிக்கை- வருவாய்

ஜூன் 7 - 6.38 லட்சம் - ரூ.1.4 கோடி

ஜூன் 18 - 13.26 லட்சம் - ரூ. 2.5 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com