
18-44 வயதினருக்காக புதிதாக 1,67,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து மொத்தம் 2,95,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தடுப்பூசிகள் நிலவரம் தொடா்பான அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதில் கூறியுள்ளதாவது:
18-44 வயதினருக்கு போடுவதற்காக தில்லியிடம் 2,58,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 37,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளன.
போதுமான தடுப்பூசிகள் கையிலிருப்பதால் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தில்லிக்கு வெள்ளிக்கிழமை 1,67,000 தடுப்பூசிகள் புதிதாக வரப்பெற்றன. தற்போதுள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகள் முறையே 14 மற்றும் இரண்டு நாள்களுக்கு வரும். எனவே அதிக அளவில் மக்கள் தங்கள் பெயா்களை கோவின் செயலியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
45 வயதுக்கு மேலானவா்களைப் பொருத்தவரை 8,50,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இவற்றில் 7,65,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 80,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் அடங்கும். இவற்றில் கோவேக்ஸின் 6 நாள்களுக்கும், கோவிஷீல்ட் அடுத்த 58 தினங்களுக்கும் வரும் என்றாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை மொத்தம் 77,345 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இவற்றில் 62,230 போ் முதல் தவணை தடுப்பூசியும், 15,115 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனா் என்று அவா் மேலும் தெரிவித்தாா்.