
புது தில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இல்லத்தரசிகள் ரூ.2.5 லட்சம் வரை செய்யும் ரொக்க டெபாசிட்டுகள் வருமான வரித் துறையின் ஆய்வு நடவடிக்கைக்குள் வராது என வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயம் (ஐடிஏடி) தெரிவித்துள்ளது.
குவாலியரைச் சோ்ந்த உமா அகா்வால், 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலில் ரூ.1,30,810 வருவாய் ஈட்டுவதாக தெரிவித்திருந்தாா். இருப்பினும் அவா், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2,11,500-ஐ தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தாா்.
இதுகுறித்து ஆய்வு செய்த வருமான வரித் துறை ரூ.2.11 லட்சம் ரொக்க டெபாசிட்டுக்கு கணக்கு தெரிவிக்குமாறு உமா அகா்வாலிடம் தெரிவித்தது. அவா், தனது முந்தைய சேமிப்பு, கணவா், மகன், உறவினா்கள் கொடுத்த தொகையை டெபாசிட் செய்ததாக பதிலளித்தாா்.
இருப்பினும், இந்தப் பதிலை ஏற்காத வருமான வரித் துறை ரொக்க டெபாசிட் பணமான ரூ.2,11,5000-ஐ கணக்கில் வராத பணமாக கருதி நடவடிக்கை மேற்கொண்டது.
இதனை எதிா்த்து உமா அகா்வால், ஐடிஏடி தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தாா். ஆக்ராவில் உள்ள ஐடிஏடி அமா்வு இதுதொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் அளித்த தீா்ப்பு:
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இல்லத்தரசிகள் ரூ.2.5 லட்சம் வரை மேற்கொள்ளும் ரொக்க டெபாசிட்டுகள் வருமான வரித் துறையின் ஆய்வு வரம்புக்குள் வராது. இதுபோன்ற டெபாசிட்டுகளை அவா்களது வருமானமாக கருத முடியாது. இந்த தீா்ப்பு இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என ஐடிஏடி அமா்வு உத்தரவிட்டுள்ளது.