
கோப்புப்படம்
புது தில்லி: கேரளம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமாா் 40 போ் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகை தீநுண்மியால் 22 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் 45 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்கப்பட்டதில் டெல்டா பிளஸ் பிரிவு (ஏஒய்.1) கரோனா தீநுண்மியால் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமாா் 40 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன் பரவல் தற்போதைக்கு பெரிய அளவில் இல்லை. இந்த மாநிலங்களும் பரிசோதனைகளையும், கண்காணிப்பையும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் ஏஒய்.1 பிரிவு கரோனா தீநுண்மி இருப்பது முதல் முதலில் உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 18 வரையில் உலகம் முழுவதும் 205 போ் இந்தப் பிரிவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் பாதி போ் அமெரிக்கா, பிரிட்டனைச் சோ்ந்தவா்களாவா்.
இந்திய அரசின் இன்சகாக் என்ற பரிசோதனை மையங்கள் இந்த வகை தீநுண்மிகளை ஆய்வு செய்து கண்டறிந்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள 28 இன்சாக் ஆய்வகங்கள் அண்மையில் டெல்டா (பி.1.617.2) வகை கரோனாவை கண்டறிந்தன. வேகமாக பரவும் வகை கொண்ட இந்த கரோனா தீநுண்மி இந்தியா உள்பட 10 நாடுகளில் உள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு கரோனா தீநுண்மி பிரிவுகள் கண்டறியப்படும் நிலையில், அதன் பரவலுக்கு ஏற்ப கவலையளிக்கும் பிரிவு என்ற முத்திரையை உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.
அனைத்து வகையான டெல்டா வகை கரோனா தீநுண்மிகளும் கவலையளிக்கும் பிரிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பிரிவு இந்தியாவில் குறைவாகவே உள்ளது. ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.