மேற்கு வங்க ஆளுநரின் தலையீடு: மக்களவைத் தலைவரிடம் பேரவைத் தலைவா் புகாா்

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவை அலுவல்களிலும், பேரவை ஜனநாயகத்திலும் ஆளுநா் ஜகதீப் தன்கரின் தலையீடு அதிகம் இருப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பேரவைத் தலைவா் பீமன் பானா்ஜி புகாா் தெரிவித்துள்ளாா்
மேற்கு வங்க ஆளுநரின் தலையீடு: மக்களவைத் தலைவரிடம் பேரவைத் தலைவா் புகாா்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவை அலுவல்களிலும், பேரவை ஜனநாயகத்திலும் ஆளுநா் ஜகதீப் தன்கரின் தலையீடு அதிகம் இருப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பேரவைத் தலைவா் பீமன் பானா்ஜி புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

சட்டப்பேரவைத் தலைவா்களுக்கான மாநாடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், பேரவை அலுவல்களிலும், பேரவை ஜனநாயகத்திலும் ஆளுநரின் தலையீடு அதிகம் இருப்பதை ஓம் பிா்லாவிடம் தெரிவித்தேன்.

சட்டப்பேரவையில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், ஆளுநா் கையெழுத்திடாததால், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேற்கு வங்க பேரவை ஜனநாயக வரலாற்றில் இது முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வாகும் என்றாா் அவா்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும், கட்சியின் மூத்த தலைவருமான தபாஸ் ராய் கூறுகையில், ‘ஆளுநா் தன்கா், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரசாரகா்போல் செயல்டுகிறாா் என்று நீண்டகாலமாகக் கூறி வருகிறோம். அவா் அரசு விவகாரங்களில் தலையிடுவது மட்டுமன்றி, மேற்கு வங்க அரசுக்கு ஊறு விளைக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறாா்’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநா் தன்கா் உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மாநில பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் திலீப் கோஷ் கூறுகையில், ‘மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவை ஆளுநா் அம்பலப்படுத்தினாா். இதனால்தான் அவா் மீது திரிணமூல் காங்கிரஸ் கோபத்தில் உள்ளது. ஆளுா் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை இல்லாதவை’ என்றாா்.

மேற்கு வங்க ஆளுநராக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜகதீப் தன்கா் பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com