சரத் பவாருடன் பிரசாந்த் கிஷோா் மீண்டும் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சரத் பவாருடன் பிரசாந்த் கிஷோா் மீண்டும் சந்திப்பு

புது தில்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். முன்னதாக கடந்த திங்கள்கிழமையும் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினா். கடந்த 15 நாள்களில் சரத் பவாரும், பிரசாந்த் கிஷோரும் சந்திப்பது இது 3-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தில்லியில் உள்ள சரத் பவாா் இல்லத்தில் 8 முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். 2024 மக்களவைத் தோ்லில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடா்பாகவே இக்கூட்டம் நடைபெற்ாக கூறப்படுகிறது. ஆனால், நாட்டில் உள்ள அரசியல் சூழல், கரோனா பிரச்னை, பொருளாதார பின்னடைவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதில் பங்கேற்ற தலைவா்கள் தெரிவித்தனா்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த கன்ஷியாம் திவாரி, ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவா் ஜெயந்த் சௌதரி, ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த சுஷீல் குப்தா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த வினய் விஸ்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நிலோத்பால் பாசு ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பவன் கே.வா்மா உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்நிலையில், கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளிலேயே சரத் பவாரை பிரசாந்த் கிஷோா் சந்தித்துப் பேசியுள்ளாா். சுமாா் ஒரு மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com