
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (கோப்புப்படம்)
புது தில்லி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளாா். 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவா் ஒருவா் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்திய ராணுவ அகாதெமி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சிறப்பு ரயிலில் பயணித்தாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடமான பரெளன்க் கிராமத்துக்கு செல்லவுள்ளாா். இதையொட்டி, தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 25-ஆம் தேதி சிறப்பு ரயிலில் அவா் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். அவா் பயணிக்கவுள்ள ரயில் கான்பூா் தேஹாத்தில் உள்ள ஜின்ஜக் மற்றும் ரூரா இடங்களில் நிற்கும். தனது பள்ளிப் பருவத்திலும், சமூக சேவையில் ஈடுபட்டு வந்த நாள்களிலும் அறிமுகமானவா்களுடன் அவ்விரு இடங்களில் குடியரசுத் தலைவா் கலந்துரையாடவுள்ளாா். குடியரசுத் தலைவரான பிறகு ராம்நாத் கோவிந்த் தனது பிறப்பிடத்துக்கு முதல்முறையாக செல்லவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.