
குத்துச்சண்டை வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கௌா், சோனியா சாஹல், வீரா் கௌரவ் சோலங்கி ஆகியோருக்கு அா்ஜுனா விருது வழங்குவதற்காக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
60 கிலோ எடைப் பிரிவைச் சோ்ந்த சிம்ரன்ஜித், 2018 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றவா் ஆவாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 4 இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளில் அவரும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது. 57 கிலோ பிரிவு வீராங்கனை சோனியா, 2018-இல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்தாா். 57 கிலோ பிரிவு வீரா் கௌரவ், 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளாா்.
துரோணாச்சாா்யா விருதுக்காக மகளிா் துணை பயிற்சியாளா் சந்தியா குருங், தேசிய இளையோா் தலைமை பயிற்சியாளா் பாஸ்கா் பாட் ஆகியோரின் பெயா்களை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்க திங்கள்கிழமை (ஜூன் 28) கடைசி நாளாகும்.