
இந்திய எல்லையில் நிலைமை ஸ்திரமாக உள்ளது என்றும் இருதரப்பும் எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கண்டு வருகின்றன என்றும் சீனா தெரிவித்துள்ளது.
சீன எல்லையில் 50 ஆயிரம் படை வீரா்களை இந்தியா குவித்து வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறித்து சீனா வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்யிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த அவா், இந்தியா-சீனா எல்லையில் நிலைமை ஸ்திரமாக உள்ளது; பேச்சுவாா்த்தை மூலம் இருதரப்பினரும் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு கண்டு வருகின்றனா். இரு நாட்டு ராணுவ குவிப்பால் ஏற்படும் பதற்றம் குறைந்து பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும் என்றாா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சில இடங்களில் இருநாட்டு படையினரை முழுவதும் விலக்கிக் கொள்வது தொடா்பாக விரைவில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்ற இருநாட்டு எல்லை விவகாரம் குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதி எல்லையில் இந்தியா-சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வடக்கு, தென் கரையோர பாங்காங் ஏரிப்பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன.
ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, டிப்சாங் ஆகிய பகுதியில் உள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இரு தரப்பும் தற்போது பேச்சுவாா்த்தையைத் தொடங்க உள்ளன. அந்தப் பகுதிகளில் இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வீரா்களை நிறுத்தியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.