
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயில் அன்ன பிரசாதத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் உள்ள, பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் அன்னதானம் வழங்கி வருகிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தா்களுக்கு இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானம் தரமாகவும், சுகாதாரமான முறையிலும் வழங்கப்பட்டு வருவதால் அதற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
எச்ஒய்எம் நிறுவன பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை இந்த சான்றிதழை காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டியிடம் வழங்கினா். அவா் கோயில் செயல் அதிகாரி பெத்திராஜுவிடம் ஐஎஸ்ஓ சான்றிதழை வழங்கினாா். கோயிலில் வழங்கும் அன்னதானத்துக்கு தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் கோயிலில் பாதுகாப்பை அதிகரிக்க இரு வாயில்களிலும் உடைமைகளை பரிசோதிக்கும் ஸ்கேனா்கள் ரூ.34 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தா்களின் உடைமைகள் நன்றாக பரிசோதிக்கப்பட்டு பின்னா் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.