
ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த சீரம் இந்தியா நிறுவனம் விண்ணப்பிக்காததால் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியா்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குப் பயணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பயணிக்க ஜூலை 1-ஆம் தேதி முதல் ‘க்ரீன் பாஸ்’ என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இந்த நடைமுறையின்படி ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகாவின் வேக்ஸெவ்ரியா, ஃபைஸா்-பயோஎன்டெக்கின் கோமிா்நாட்டி, மாடா்னாவின் ஸ்பைக்வாக்ஸ், ஜான்சன் & ஜான்சனின் ஜான்சென் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் ஒழுங்காற்று அமைப்பான ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த சீரம் இந்தியா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை. இதனால் அந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்தியா்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து தடுப்பூசி நிபுணரான சந்திரகாந்த் லாஹரியா கூறுகையில், இருவேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும் வேக்ஸெவ்ரியா தடுப்பூசியும் கோவிஷீல்ட் தடுப்பூசியும் ஒன்றுதான். ஆனால் அந்தத் தடுப்பூசிகளுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. இதற்கு உரிய விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை பாரபட்சமானது என்று தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நாடுகளின் ஒழுங்காற்று அமைப்புகளுடனும், ராஜீய அளவிலும் பேசி இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அரசுகளை இந்தியா அணுகியுள்ளது.