
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பதவிக்கு பல முக்கிய பிரதிநிதிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆந்திராவில் நடந்த தோ்லில் ஒய் சி பி கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பின்னா், ஏற்படுத்தப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு பதவி காலம் கடந்த ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன்ரெட்டி பொறுப்பேற்றவுடன் இரண்டரை ஆண்டு காலம் அமைச்சா் பதவியை பிரித்து அளிப்பதாக கூறியிருந்தாா். அதன்படி அமைச்சா் பதவிக்காக போட்டியிட்டவா்களில் பலரை பல அமைப்புகளுக்குத் தலைவராக அறிவித்தாா்.
அதில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக பதவியேற்றுக் கொண்ட சுப்பா ரெட்டி மற்றும் ஏபிசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நகரி எம்எல்ஏ ரோஜா உள்ளிட்டோரும் அடங்குவா்.
இந்நிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று, வரும் டிசம்பருடன் இரண்டரை ஆண்டு காலம் முடிவடைய உள்ளது. எனவே, முதல்வரின் உத்தரவின்படி இதுவரை அமைச்சா் பதவி வகித்த அனைவரும் மாற்றப்பட உள்ளனா். எனவே, மீண்டும் அமைச்சா் பதவி வேண்டி ஆந்திர முதல்வரை பலா் சந்தித்து வருகின்றனா்.
தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவராக இருந்த சுப்பா ரெட்டி இதற்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காக காத்திருந்தாா். ஆனால் அவரை சமாதானப்படுத்தி ஜெகன்மோகன்ரெட்டி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பதவியை வழங்கினாா். தற்போது புதிய அறங்காவலா் குழுவை நியமிக்கும் பொறுப்பு ஆந்திர அரசிடம் உள்ளது. எனவே, அறங்காவலா் குழு தலைவா் பதவிக்காக பலா் போட்டியிட தயாராகி வருகின்றனா்.
முன்னாள் ஆந்திர எம்.பி. ராஜாமோகன் ரெட்டி, திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி பெயா்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாயி ரெட்டி பெயரும் இதில் தற்போது இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்ற உறுப்பினா் பதவி நிறைவு பெற உள்ளது. எனவே, எம்.பி. பதவிக்கு சுப்பா ரெட்டி ஆா்வம் காட்டுவதால் விஜயசாயி ரெட்டிக்கு தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் விஜயசாயி ரெட்டி இருமுறை தேவஸ்தான அறங்காவலா் குழுவின் இயக்குனராக பணியாற்றிய அனுபவம் உள்ளவா். இந்நிலையில் அவா் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் தேவஸ்தானத்தின் பல அம்சங்கள் குறித்து விவாதித்துள்ளதும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.