
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை (12 சதவீதம்) மத்தியஅரசு செலுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் புது தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
தற்சாா்பு இந்தியா...: தற்சாா்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டமானது கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, பணியாளா்கள் செலுத்தும் 12 சதவீத வருங்கால வைப்பு நிதித் தொகையையும், பணியாளா்களுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத வருங்கால வைப்பு நிதித் தொகை பங்களிப்பையும் மத்திய அரசே செலுத்தும்.
யாருக்கு பொருந்தும்?: அதிகபட்சமாக 1,000 போ் வரை பணியமா்த்தியுள்ள நிறுவனங்கள், ரூ.15,000 வரை மாத வருமானம் ஈட்டும் பணியாளா்கள் ஆகியோருக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் கடந்த 18-ஆம் தேதி வரை சுமாா் 21.42 லட்சம் போ் பலனடைந்துள்ளனா். இத்திட்டத்துக்காக ரூ.902 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தானிய திட்டத்துக்கு ரூ.93,869 கோடி: இலவச உணவு தானியங்கள்: தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குக் கடந்த மே மாதம் முதல் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்காக ரூ.93,869 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பா் வரை இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டது. அதற்காக ரூ.1,33,972 கோடி செலவிடப்பட்டது.
கோதுமை கொள்முதல் உயா்வு: கோதுமை கொள்முதல் இதுவரை இல்லாத வகையில் 432 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.85,413 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் டிஏபி உள்ளிட்ட உரங்களுக்கான மானியமாகக் கூடுதலாக ரூ.14,775 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் இணைய வசதிக்கு...: நாட்டில் உள்ள 2.52 லட்சம் கிராமங்களில் இணையவசதியை ஏற்படுத்துவதற்காக செயல்படுத்தப்படு வரும் பாரத்நெட் திட்டத்துக்குக் கூடுதலாக ரூ.19,041 கோடி ஒதுக்கப்படவுள்ளது. கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி, 1,56,223 கிராமங்களில் இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மொத்தமாக ரூ.61,109 கோடி செலவிடப்படவுள்ளது என்றாா் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.