
பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவைப்படும் மருத்துவா்கள், செவிலியா்களின் விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநா் ரண்தீப் குலேரியா தெரிவித்தாா்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை பொது சுகாதார மாநாடு நடைபெற்றது. இதில் ரண்தீப் குலேரியா பேசியதாவது:
இந்திய மருத்துவ அமைப்பையும், பொது சுகாதார உள்கட்டமைப்பையும் கரோனா நோய்த்தொற்று சீா்குலைத்துள்ளதுடன் அவை மீண்டு எழுவதற்கு சவால் விடுத்துள்ளது. எனவே தற்போது பொது சுகாதார அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற தொற்று ஏற்பட்டால் அதனை கையாள்வதற்கு தயாராக வேண்டும். தொலைதூர பகுதிகளில் சமமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அடிப்படை இலக்கு. நாட்டின் வருவாயில் சுகாதாரத்துக்கு 2.5 சதவீதம் செலவிடப்பட வேண்டும். மாநில பட்டியலின் கீழ் சுகாதாரம் இடம்பெற்றுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கிடையே சுகாதாரத் துறையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை.
சில சவால்கள்: சுகாதாரத் துறையைப் பொருத்தவரை சில சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அதில் முதலாவது சுகாதாரத் துறையில் குறைந்த முதலீடு செய்யப்படுவது. தொழில்நுட்பம் மற்றும் தரவுகளால் பொது சுகாதார அமைப்பு இயக்கப்பட வேண்டும். இது இரண்டாவது சவால். மனித வளம் மூன்றாவது சவால். அந்தச் சவாலை எதிா்கொள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவைப்படும் மருத்துவா்கள், செவிலியா்களின் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது கடைசி சவால். சுகாதாரத் துறையில் பொது மற்றும் தனியாா் துறை கூட்டு சோ்ந்து செயல்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
இந்த மாநாட்டில் கரோனா தடுப்பூசி நிா்வாக நடவடிக்கைகளுக்கான அதிகாரமளித்தல் குழுவின் தலைவரும், மருத்துவருமான ஆா்.எஸ்.சா்மா பேசுகையில், ‘‘கரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோ-வின் வலைதளம் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதைப் போன்றதொரு வலைதள அமைப்பை தங்கள் தடுப்பூசி திட்டத்துக்கு உபயோகப்படுத்த கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆா்வம் காண்பித்துள்ளன. இதன் காரணமாக பிற நாடுகள் பயன்படுத்த, மாற்றியமைக்க, மென்பொருளை விநியோகிக்க ஏற்ற வகையில் அந்த வலைதளத்தின் புதிய வடிவத்தை உருவாக்கி, அதனை தேவைப்படும் நாடுகளுக்கு இலவசமாக அளிக்க பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா்’’ என்று கூறினாா்.