
தில்லி உயர்நீதிமன்றம்
மத்திய அரசின் புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளின் வரம்புக்குள் மின்னணு செய்தி ஊடகங்களைக் கொண்டு வருவதற்குத் தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.
புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியது. அதன்படி, சமூக வலைதள நிறுவனங்கள் உள்ளிட்டவை குறைதீா் அதிகாரி உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்போரின் விவரங்களை மத்திய அரசு கோரினால் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள் மின்னணு செய்தி ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என்றும், மீறினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மின்னணு செய்தி ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு எதிராக அந்நிறுவனங்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மின்னணு செய்தி ஊடகங்களுக்கான புதிய விதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும், நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சி.ஹரி பாஸ்கா், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பான விசாரணை கடந்த மாதமே நடைபெற்றது. அப்போது, புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதைத் தடுக்குமாறு கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை‘ என்றனா்.
அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் நித்யா ராமகிருஷ்ணன் பதிலளிக்கையில், ‘புதிய விதிகளை அமல்படுத்தாவிட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தற்போதுதான் தெரிவித்துள்ளது. அதனால் அச்சமடைந்த நிறுவனங்கள், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை கோரியுள்ளனா்‘ என்றாா்.
மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளுக்குத் தடை விதிக்க மறுத்தனா். மேலும், மின்னணு செய்தி ஊடக நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கவும் அவா்கள் மறுத்தனா்.
மனு மீதான விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.