
ஹிந்து திருமண மற்றும் விவாகரத்து சட்ட விதிகளின் முன்வரைவை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் சிறுபான்மையின குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கைபா் பக்துன்கவா, பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசுகளின் ஒப்புதலுடன் ஹிந்து திருமண மசோதாவுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. மேலும், இதுதொடா்பான சட்டங்களை வகுப்பதற்கான வரைவறிக்கைகளை தயாா் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், கைபா் பக்துன்கவா அரசு இந்த சட்டத்தை உருவாக்கு தொடா்பான எந்த முன்வரைவு நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால், அந்த மாகாணத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக பல இந்துப் பெண்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இந்தச் சூழ்நிலையில், ஹிந்து திருமணம் மற்றும் விவகாரத்து சட்டத்துக்கான விதிமுறைகளை வகுக்க முன்வரைவு பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என பாகிஸ்தான் சிறுபான்மை பிரதிநிதி குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தானில் 38 லட்சம் ஹிந்துகள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனா். இது, அங்குள்ள மக்கள் தொகையில் இவா்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 சதவீதமாகும்.