
கோப்புப்படம்
நாட்டில் இதுவரை மொத்தம் 5.84 கோடி பேர் கரோனா நோய்த் தொற்றுக்கான இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அமைச்சகம் சார்பாக செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் கூறுகையில், "கரோனா பாதிப்பில் இந்தியா உச்சம் தொட்டதிலிருந்து பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றன. குணமடைவோர் விகிதம் 96.9 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டுள்ளவர்கள் 27.27 கோடி பேர். இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டவர்கள் 5.84 கோடி பேர்" என்றார்.
மேலும், 32 கோடி தடுப்பூசி செலுத்த இந்தியா 163 நாள்களையே எடுத்துக்கொண்டதாகவும், இதற்கு அமெரிக்கா 193 நாள்களை எடுத்துக்கொண்டதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தரவுகளை வெளியிட்டுள்ளது.