'போயி சாவுங்க' என பெற்றோரை சாடிய கல்வி அமைச்சர்: ம.பி.யில் சர்ச்சை

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை 'போயி சாவுங்க' என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சாடியதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படம்: டிவிட்டர்
படம்: டிவிட்டர்


மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை 'போயி சாவுங்க' என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் சாடியதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் கூட்டமைப்புத் தலைவர் கமல் விஷ்வகர்மா இதுபற்றி கூறியது:

"பள்ளிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகப் புகாரளிக்க செவ்வாய்க்கிழமை காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் இல்லத்துக்கு பெற்றோர்கள் சென்றனர். ஆனால், அமைச்சர் அவர்களது கருத்தைக் கேட்காமல், பொறுமை இழந்து 'போயி சாவுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என சாடியிருக்கிறார்" என்றார் கமல்.

அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் என பெற்றோர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடரவும் சங்கம் திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் தலைவருமான நரேந்திர சலுஜா, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரை விமரிசித்துள்ளார்.

சலுஜா கூறியது:

"பெற்றோர்கள் சங்கம் நிவாரணம் கோரி அமைச்சரைச் சந்திக்கச் சென்றனர். ஆனால், பொறுப்பற்ற முறையில் அவர்களை நடத்தியுள்ளார். 'சாக வேண்டும் என விரும்பினால், போயி சாவுங்கள், யார் கவலைப்பட்டார்கள்' என பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்."

இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்பால் சிங் சிசோடியா கூறியது:

"பள்ளிக் கட்டணம் தொடர்பாக பெற்றோர்கள் சங்கத்தினர் அமைச்சரைச் சந்திக்கச் சென்றனர். அமைச்சர் அவர்களைக் காத்திருக்கச் சொன்னார். இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொண்டு தொடர்புகொள்வதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன்பிறகு பெற்றோர்கள் நாங்கள் சாக வேண்டுமா என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். அதற்கு அவர் ஏன் சாக வேண்டும், விவகாரம் குறித்து தெரிந்துகொண்டு நான் பிரச்னைகளைத் தீர்ப்பேன் எனக் கூறியுள்ளார் அமைச்சர்."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com