
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு தடையில்லாமல் சேவை வழங்க தேவஸ்தானம் ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு ஊசி போட முடிவு செய்தது. அதன்படி செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி மற்றும் தா்மா ரெட்டி ஆகியோரின் உத்தரவின்படி வியாழக்கிழமை முதல் திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
முதலில் ஏழுமலையான் கோயில், வரவேற்பு, குடிநீா் வழங்கல் துறை, சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறையினருக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டு நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு தடுப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்கள் ஆதாா் அட்டையுடன் ஓப்புதல் பத்திரத்தையும் சமா்ப்பித்தால், அவா்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும். முதல் முறை ஊசி போட்டுக் கொண்டவா்களுக்கு 28 நாள்களுக்கு பின் 2-வது முறை தடுப்பு ஊசி போடப்படும்.
ஆந்திர சுகாதாரத் துறை முதற்கட்டமக அனுப்பிய தடுப்பு ஊசி மருந்துகளை கொண்டு 550 பேருக்கு தடுப்பு ஊசி போடப்பட உள்ளது. அதேபோல் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) முதல் கரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.