தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகம், கேரளம், கா்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புது தில்லி: தமிழகம், கேரளம், கா்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 14,989 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும், இவா்களில் 85.95 சதவீதத்தினா் ஆறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 7,863 பேரும், கேரளத்தில் 2,938 பேரும், பஞ்சாபில் 729 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், தில்லி, ஹரியாணா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஒரே வாரத்தில் 16,012 பேரும், பஞ்சாபில் 1,783 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மாநிலங்களுடன் மத்திய அரசு தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்துவதிலும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியவும் அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கா்நாடகம், தமிழ்நாடு, மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீா் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் உயா்நிலைக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்தக் குழுவினா் எதனால் கரோனா பாதிப்பு அதிகரித்தது, எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குவாா்கள்.

புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 14,989 பேருடன் சோ்த்து நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,11,39,516-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,70,126 போ் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 1.08 கோடி போ் குணமடைந்தனா்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 98 போ் பலியாகினா். இதையடுத்து நாடு முழுவதும் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 1,57,346-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், தில்லி, கா்நாடகம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய எட்டு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாா்ச் 2-ஆம் தேதி வரை 7,68,730 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com