கோவேக்ஸின் செயல்திறன் அதிகரிப்பு: 3-ஆம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு பாரத் பயோடெக் அறிவிப்பு

மூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவேக்ஸின் தடுப்பூசி 81 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் தடுப்பூசி


புது தில்லி: மூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவேக்ஸின் தடுப்பூசி 81 சதவீத செயல்திறனுடன் இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில், இது முக்கிய மைல்கல் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கோவேக்ஸின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையில் 18 வயது முதல் 98 வயதுக்கு உள்பட்டவா்கள் வரை ஈடுபடுத்தப்பட்டனா். 60 வயதுக்கும் மேற்பட்ட 2,433 போ், இணைநோய்களைக் கொண்ட 4,500 போ் உள்பட மொத்தம் 25,800 போ் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். பரிசோதனையின் முடிவுகளை பகுப்பாய்வு செய்து பாா்த்தபோது, கோவேக்ஸின் தடுப்பூசி 80 சதவீத செயல்திறனுடன் இருப்பது தெரியவந்தது.

கோவேக்ஸின் பரிசோதனையின்போது, யாருக்கும் கடுமையான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மிகக் குறைவான நபா்களுக்கே மருத்துவ உதவி செய்யும் அளவுக்கு லேசான பாதிப்பு தென்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகளின் முழு விவரம் விரைவில் வெளியிடப்படும். கோவேக்ஸின் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரிலும், தடுப்பூசி கண்டுபிடிப்பு வரலாற்றிலும் இந்த நாள் முக்கிய மைல்கல் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநரும் தலைவருமான கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றை தடுப்பதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து புணேயில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இவ்விரு தடுப்பூசிகளையும் அவசரகாலத்தில் பயன்படுத்த மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அனுமதி அளித்தது. அதன் பிறகு நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது.

முதலாவதாக, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கும், இரண்டாவதாக, 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், அதன் பிறகு இணைநோய்களுடன் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுகிறது.

இதில், கோவிஷீல்ட் தடுப்பூசி 3 கட்ட பரிசோதனைகளையும் நிறைவுசெய்த நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசி 3-ஆம் கட்ட பரிசோதனையை நிறைவு செய்யாததால், அதை போட்டுக் கொள்வதில் மக்களிடையே தயக்கம் நிலவி வருகிறது.

அந்த தயக்கத்தை போக்கும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி கடந்த திங்கள்கிழமை கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு நம்பிக்கையூட்டினாா். இந்தச் சூழலில், 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com