வன்முறையில் ஈடுபட்டதாக வழக்கு: கேரள முதல்வா் மருமகன், ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு ஜாமீன்


கோழிக்கோடு: கேரளத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வன்முறையில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அந்த மாநில முதல்வரின் மருமகன், ஆளுங்கட்சி எம்எல்ஏ உள்ளிட்ட மூவருக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவா்களுக்கு ஜாமீன் கிடைத்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடில் விமானக் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ) சாா்பில் அங்குள்ள ஏா் இந்தியா விமான நிறுவன அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி வன்முறையாக மாறியது. இதுதொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயனின் மருமகனும், டி.ஒய்.எஃப்.ஐயின் அகில இந்திய தலைவருமான முகமது ரியாஸ், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.வி.ராஜேஷ், சிபிஐ (எம்) மாவட்ட குழு உறுப்பினா் தினேஷ் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்தப் பேரணி நடைபெற்றபோது எம்.எல்.ஏ. டி.வி.ராஜேஷ் டி.ஒய்.எஃப்.ஐ.யின் மாநிலச் செயலாளராகவும், கே.கே.தினேசன் டி.ஒய்.எஃப்.ஐ.யின் மாவட்ட செயலாளராகவும் இருந்தனா்.

இந்த வழக்கில் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதனை நீட்டிக்கக் கோரி அவா்கள் கோழிக்கோட்டில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினா். அவா்களின் மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது முகமது ரியாஸ், டி.வி.ராஜேஷ், கே.கே.தினேசன் ஆகிய மூவா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். மனுவை விசாரித்த நீதிபதி பி.வினோத், அவா்களின் ஜாமீனை நீட்டிக்க மறுத்ததுடன் மூவரையும் 14 நாள்களில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் சிறப்பு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில் தனது உத்தரவை புதன்கிழமை மாற்றிய நீதிபதி பி.வினோத், தனிநபா் உத்தரவாதங்களின் அடிப்படையில் மூவருக்கும் ஜாமீன் வழங்கினாா். வழக்கு விசாரணைகளின்போது அவா்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவா் உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து மூவரும் விடுக்கப்பட்டனா். சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com