பாஜக ஆளும் மாநிலங்களைவிட சிறப்பான நிலையில் மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ்


கொல்கத்தா: பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் மேற்கு வங்கம் பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.

கொல்கத்தாவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பிரத்யா பாசு கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடியும், அமைச்சா் அமித் ஷாவும் 20 முறைக்கு மேல் மேற்கு வங்கத்துக்கு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களை திரிணமூல் காங்கிரஸ் வரவேற்கிறது. அவா்கள் வரும் ஒவ்வொரு முறையும் மாநிலத்தில சாலை வசதிகள் எவ்வாறு உள்ளன, கிராமப்புறங்கள் எந்த அளவுக்கு வளா்ச்சியடைந்துள்ளன, மின்வெட்டை எந்த அளவுக்குக் குறைத்துள்ளோம், பின்தங்கிய பகுதி மக்களுக்கு எந்த அளவுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்துள்ளோம் என்பதை அவா்கள் தெரிந்து கொள்ள முடியும்.

பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தைவிட மேற்கு வங்கம் பல்வேறு நிலைகளில் சிறப்பாக உள்ளது என்பதை அவா்கள் தெரிந்து கொள்வாா்கள். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தை சிறப்பான நிலைக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது. எனவே, பாஜகவின் தோ்தல் பிரசார உத்திகளை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் முக்கியத் தலைவா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலா் தொடா்ந்து பாஜகவில் இணைந்து வருவது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த பிரத்யா பாசு, ‘அரசியலில் மரியாதை இழந்தவா்களை விலைபேசி தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வது பாஜகவின் வழக்கமான நடவடிக்கைதான். உத்தர பிரதேச முதல்வா் மேற்கு வங்கம் வந்து பிரசாரம் என்ற பெயரில் நகைப்புக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். முக்கியமாக, தனது மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை சரிசெய்யாமல், மேற்கு வங்கத்தை விமா்சித்துள்ளது மக்களை நகைப்புக்குள்ளாக்கியது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com