

புது தில்லி: மத்தியஸ்தம்-சமரசம் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது.
மத்தியஸ்தம்-சமரசம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் இயற்றியது. அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நோக்கில், மத்தியஸ்தம்-சமரசம் சட்டத் திருத்த மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த ஒப்பந்தம் தொடா்பாக மத்தியஸ்தம் மற்றும் சமரசம் வாயிலாக அளிக்கப்பட்ட தீா்வை அமல்படுத்துவதற்குத் தடை பெறும் வாய்ப்பை இந்த மசோதா வழங்குகிறது.
அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த மாதம் 12-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடா்ந்து, மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அந்த மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெறவில்லை. புதன்கிழமையும் எம்.பி.க்களின் அமளி தொடா்ந்தது. எனினும், மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது.
விவாதத்துக்கு அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பதிலளித்தாா். அதைத் தொடா்ந்து, மசோதாவின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாகப் பெரும்பாலான எம்.பி.க்கள் வாக்களித்தனா். அதன் காரணமாக, மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவா் ஒப்புதல் அளித்தபிறகு மசோதா சட்டவடிவு பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.