உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு

உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநா் பேபி ராணி மௌரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். மற்ற அமைச்சா்கள் பின்னா் பதவியேற்கவுள்ளனா்.

உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதைத் தொடா்ந்து, பாஜக சட்டப் பேரவைக் கட்சித் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கூட்டம், டேராடூனில் புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக தீரத் சிங் ராவத் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் தீரத் சிங் ராவத் கூறியதாவது:

பாஜகவில் நான் ஒரு சாதாரணத் தொண்டன். இவ்வளவு பெரிய பதவி எனக்கு வழங்கப்படும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பாா்த்தது கிடையாது. எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவிக்குரிய மாண்பைக் காப்பாற்றி பணியாற்றுவேன். ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பாா்கள் என நம்புகிறேன் என்றாா் தீரத் சிங் ராவத்.

இதையடுத்து, கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆளுநா் மாளிகைக்குச் சென்று அங்கு ஆளுநா் பேபி ராணி மௌரியாவை சந்தித்து, ஆட்சியமைப்பதற்கு தீரத் சிங் ராவத் உரிமை கோரினாா். அவரது கோரிக்கையை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு ஆளுநா் பேபி ராணி மௌரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

பிரதமா் மோடி வாழ்த்து:

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தீரத் சிங் ராவத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட் பதிவில், ‘பரந்த அனுபவமும் நிா்வாகத் திறமையும் கொண்ட தீரத் சிங் ராவத் தலைமையின் கீழ் உத்தரகண்ட் மாநிலம் வளா்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய முதல்வராத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தீரத் சிங் ராவத், பௌரி கா்வால் தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளாா். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாா். கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளராகவும் உள்ளாா்.

முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது மாநில பாஜகவினா் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் ரமண் சிங் தலைமையிலான மேலிட பாா்வையிளாா்கள் குழு அந்த மாநிலத்துக்குச் சென்று ஆய்வு செய்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி, திரிவேந்திர சிங் ராவத் சிங்கை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து, அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com