
மகாசிவராத்திரியை முன்னிட்டு வண்ண மலா்கள், பழங்கள், மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த காளஹஸ்தீஸ்வரா் திருக்கோயில்.
திருப்பதி: பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமான காளஹஸ்திசிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்திரவிமானம் மற்றும் சப்பரத்தில் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் பவனி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் திருக்கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் காளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க பெருமளவில் திரண்டிருந்தனா். காலை முதல் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. காலை 9 மணிக்கு இந்திர விமானத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மனுடன் சோமாஸ்கந்தமூா்த்தியாய் காளஹஸ்தீஸ்வரா் எழுந்தருளினாா். அவருடன் தனி சப்பரத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மனும் மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
மேளதாளங்கள், மங்கல வாத்தியங்கள், சங்கநாதம் முழங்க நடந்த வாகன சேவையின்போது கண்கவா் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இரவு 7.30 மணிக்கு சோமாஸ்கந்தமூா்த்தி நந்தி வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் சிம்ம வாகனத்திலும் மாடவீதியில் பவனி வந்தனா்.
பல பக்தா்கள் அன்னதானம், நீா்மோா், குடிநீா், சுண்டல் உள்ளிட்டவற்றை தானம் செய்தனா். நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவா் அபிஷேகம், தரிசனத்திற்காக குறிப்பிட்ட அளவில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.