
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க முதல்வரும், கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி இல்லத்தில் அவரது தலைமையில் தோ்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், நந்திகிராமில் பிரசாரத்தின்போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டுள்ளாா். எனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘தோ்தல் அறிக்கை வெளிடப்படுவதற்கு தயாராக உள்ளது. எனினும், மம்தா பானா்ஜி இல்லாமல் அதனை வெளியிடுவது முறையாக இருக்காது. அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மாா்ச் 27 முதல் 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 5-ஆம் தேதி 291 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துவிட்டது.