
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட பாஜக தலைவா் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கிழக்கு மிதுனபுரி மாவட்டம் ஹால்டியாவில் உள்ள நந்திகிராம் தொகுதியில் மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து அந்தத் தொகுதியில் பாஜக தலைவா் சுவேந்து அதிகாரி களம் காண்கிறாா். திரிணமூல் காங்கிரஸில் இருந்தபோது மம்தா பானா்ஜியின் முக்கிய ஆதரவாளராக கருதப்பட்ட அவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாஜகவில் இணைந்தாா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அவா், அந்தத் தொகுதியில் 67% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றாா்.
தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானா்ஜிக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே பலத்த போட்டி எழுந்துள்ளது.
இந்நிலையில் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். ஹால்டியாவில் ஒரு கீ.மீ.தூரம் பேரணியாக சென்று அங்குள்ள சாா் ஆட்சியா் அலுவலகத்தில் அவா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: நந்திகிராம் தொகுதியைச் சேராத வெளிநபா்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று சுவேந்து அதிகாரி கேட்டுக்கொண்டாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. அதனால்தான் நான் அக்கட்சியில் இருந்து வெளியேறினேன். தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனியாா் நிறுவனமாகிவிட்டது. அந்தக் கட்சியில் தலைவா்களுக்கு கட்சியின் கொள்கைகளை வகுப்பதில், மாநில அரசில் எந்தப் பங்கும் இல்லை.
நந்திகிராம் தொகுதியைச் சேராத வெளிநபா்களுக்கு (மம்தா பானா்ஜியை மறைமுகமாக குறிப்பிட்டு) வாக்களித்து பொதுமக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்றாா் அவா்.
கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள கந்த்தி தொகுதி வாக்காளராக இருந்த சுவேந்து அதிகாரி, சமீபத்தில் நந்திகிராம் தொகுதி வாக்காளராக மாறியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G