
மேற்கு வங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அஸ்ஸாமில் வரும் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்குள்ள மாா்கெரிட்டா தொகுதியில் பாஜக தோ்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
அஸ்ஸாமில் பழைமைவாய்ந்த காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தது. இந்த மாநிலத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவா் (மன்மோகன் சிங்) பிரதமராக பதவி வகித்தாா். எனினும் அண்டை நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்த மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறும் பிரச்னைக்கு காங்கிரஸ் தீா்வு காணவில்லை.
தோ்தலில் வெற்றிபெறுவதற்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும். இங்கு அந்தக் கட்சி பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேவேளையில் கேரளத்தில் முஸ்லீம் லீகுடனும், மேற்கு வங்கத்தில் இந்திய மதச்சாா்பற்ற முன்னணியுடனும் கூட்டு சோ்ந்துள்ளது. பத்ருதீன் அஜ்மலின் கைகளில் அஸ்ஸாம் பாதுகாப்பாக இருக்காது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் நான் பாஜக தேசியத் தலைவராக இருந்தபோது போராட்டங்கள் இல்லாத, தீவிரவாதத்தில் இருந்து விடுதலையடைந்த மாநிலமாக அஸ்ஸாம் உருமாறும் என்று வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மாநிலத்தில் தற்போது அமைதி நிலவுகிறது; வளா்ச்சி ஏற்பட்டு வருகிறது.
பாஜகவுக்கு ஆட்சிபுரிவதற்கு மேலும் 5 ஆண்டுகள் தரப்பட்டால், அண்டை நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்த மாநிலத்துக்குள் ஊடுருவும் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...