
இதுவரை இல்லாத அளவில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் இதுவரை இல்லாத அளவில் மார்ச் 15ஆம் தேதி 30 லட்சத்து 39 ஆயிரத்து 394 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரையில் 3 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரத்து 432 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 15 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 24,492 பேர் கரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 79.73 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிரத்தில் 15,051 பேரும், பஞ்சாபில் 1,818 பேரும், கேரளத்தில் 1,054 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், தில்லி, குஜராத், கர்நாடகம், ஹரியாணா ஆகிய 8 மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கேரளத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மொத்த கரோனா பரிசோதனைகள் 22.8 கோடியை (22,82,80,763) தாண்டிவிட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 131 இறப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 48 பேர் உயிரிழந்தனர். பஞ்சாபில் 27 பேரும், கேரளத்தில் 11 பேரும் உயிரிழந்தனர். ராஜஸ்தான், சண்டீகர், ஜம்மு-காஷ்மீர், ஒடிஸா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தற்போது நாடு முழுவதும் 2,23,432 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.