
மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்கள் கொல்கத்தாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில், கேனிங் வெஸ்ட், மக்ரஹாத், குல்தாலி, ஜோய்நகர், பிஷ்ணுபூர் ஆகிய தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மீது அதிருப்தி அடைந்த அந்தத் தொகுதியின் தொண்டர்கள் கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் கூறுகையில், "கேனிங் வெஸ்ட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்னாப் ராய் வேட்புமனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர் திரிணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேறி 5 நாள்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். தற்போது அவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி ஊழலில் ஈடுபட்ட பல திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கே கட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களில், பல தலைவர்கள் பாஜக தொண்டர்களுக்கு எதிராக பல அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களாவர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இதுபோன்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெறாவிட்டால் நாங்கள் தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம். தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட மாட்டோம் என்றனர்.
போராட்டங்களில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களில் ஒரு பகுதியினர் பிரதான வாயிலுக்கு வெளியே உள்ள தடுப்புகளை மீறி அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதற்காக லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.