
கோப்புப்படம்
தேசத் துரோக வழக்குகள் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸும், பாஜகவும் செவ்வாய்க்கிழமை காரசாரமாக விவாதம் நடத்தின. இக்கடுமையான சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, ஜனநாயகம் குறித்து மற்றவர்களுக்கு காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி.யான அனுமுலா ரேவந்த் ரெட்டி, நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் தேசத் துரோக வழக்குகள் எவ்வளவு பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு மக்களவையில் எழுத்து மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி அளித்த பதிலாவது:
தேசத் துரோக வழக்குகள் 2014-இல் 47, 2015-இல் 30, 2016-இல் 35, 2017-இல் 51, 2018-இல் 70, 2019-இல் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசத் துரோக வழக்குகளில் மத்திய அரசின் நேரடி ஈடுபாடு எதுவும் இல்லை என்றார்.
இப் பதிலுக்குத் திருப்தி அடையாத எம்.பி. அனுமுலா, நான் கடந்த 10 ஆண்டுகளின் விவரங்களைக் கேட்டிருந்தேன். ஆனால் 2014 முதல் 2019 வரையிலான புள்ளி விவரங்களே தெரிவிக்கப்பட்டுள்ளன. 2014-க்குப் பிறகு யாராவது மத்திய அரசின் கொள்கைகளைப் பற்றி குறைக் கூறினால் அவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2019-இல் இந்த வழக்குகளில் தண்டனை விகிதம் 3.3 சதவீதமாகும். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்பதே இதன் அர்த்தமாகும் என்றார்.
மேலும் அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறும் பரிந்துரைகள் ஏதும் அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்து இணை அமைச்சர் ரெட்டி கூறியதாவது:
தேசத் துரோக வழக்குகளைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் ஆட்சியின்போது எந்த ஒரு புள்ளிவிவரங்களும் தனியாக கையாளப்படவில்லை. அக்கட்சி இந்திய தண்டனைச் சட்டத்தின் அனைத்து புள்ளிவிவரங்களுடன் இந்தப் புள்ளி விவரங்களையும் சேர்த்து கையாண்டது என்று குற்றம் சாட்டினார்.
அப்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி பேசுகையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ மூலம் அரசியல் தலைவர்களின் கருத்து சுதந்திரம் அடக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்து இணை அமைச்சர் ரெட்டி கூறுகையில், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து காங்கிரஸ் பாடம் நடத்த வேண்டியதில்லை. மாறாக அக்கட்சிதான் மிசா சட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், வாஜ்பாய் மீது தவறாகப் பயன்படுத்தியது என்றார்.