
உச்ச நீதிமன்றம்
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் தொடா்பான வழக்கில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஏப்ரல் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-இல் கோத்ரா பகுதியில் சபா்மதி விரைவு ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். அச்சம்பவத்தைத் தொடா்ந்து குஜராத்தின் பல பகுதிகளில் வகுப்புவாத கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தூண்டியதாகவும் அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் அப்போதைய முதல்வா் மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கலவரம் தொடா்பான வழக்கில் மோடியின் பெயரும் சோ்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் மோடிக்கு எதிராக எந்தவித உறுதியான ஆதாரங்களும் இல்லை என்று கூறி சிறப்பு விசாரணைக் குழு, கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவித்திருந்தது.
சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவுக்கு எதிராக, குஜராத் கலவரத்தில் உயிரிழந்த ஏசன் ஜாஃப்ரி என்பவரின் மனைவியான ஜகியா ஜாஃப்ரி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
அதைத் தொடா்ந்து, குஜராத் உயா்நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். உயா்நீதிமன்றமும் ஜகியாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். கீழமை நீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் பல்வேறு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் மனுவைத் தள்ளுபடி செய்ததாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜகியா ஜாஃப்ரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்கு விசாரணையை ஏப்ரலுக்கு ஒத்திவைக்கக் கோரி மனு அளித்தாா்.
வழக்குரைஞா்கள் பலா் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பான வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு அவா் கோரினாா். இதற்கு குஜராத் அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவும், சிறப்பு விசாரணைக் குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். விசாரணை மேலும் ஒத்திவைக்கப்படாது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.