ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி: போர்ச்சுகல் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் நாடு முழு ஆதரவு அளிக்கும் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின்
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி: போர்ச்சுகல் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் நாடு முழு ஆதரவு அளிக்கும் என்று சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் (ஐபியு) தலைவர் துவார்த்தே பச்சேகோ தெரிவித்தார்.
 மேலும், இந்தியா தனது நலத்துக்கு மட்டுமல்லாமல், சர்வதேச நலனிலும் அக்கறை கொண்ட நாடாக இருந்து, உலக நாடுகளுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 போர்ச்சுகல் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான துவார்த்தே பச்சேகோ, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 7 நாள்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், நாடாளுமன்ற அவை நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை பார்வையிட்டார். இதையடுத்து, அவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து துவார்த்தே பச்சேகோ பேசியதாவது:
 கரோனா தொற்று காலக்கட்டத்தில் சமூக, பொருளாதார ரீதியாக எவ்வாறு மீண்டு வருவது என்பது சர்வதேசத்துக்கும் சவாலாக இருந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மற்ற நாடுகளால் மதிக்கப்படுவதோடு ஓர் முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.
 ஐனநாயக மாண்புகளில் இந்தியாவின் அர்ப்பணிப்புகளை நாள்தோறும் காணமுடியும். தனது நலத்துக்கு மட்டுமல்லாமல், சர்வதேச நலனிலும் அக்கறை கொண்ட நாடாக திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா, பெருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் சாதனை புரிந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தத்தை போர்ச்சுகல் வரவேற்கிறது. அதில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் முழு ஆதரவை அளிக்கும் என்றார் அவர்.
 ஐபியு தலைவரை வரவேற்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், "சர்வதேசத்தின் அமைதிக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறார். பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக பிரதமர் மோடி உள்ளார். பல நாடுகளின் பேரிடர்களின் புனரமைப்பு, புனர்வாழ்வுப் பணிகளில் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளது. நிலையான அபிவிருத்திதான் இந்தியாவின் இலக்கு. ஒரு நாட்டின் நாடாளுமன்றம் விவாதித்து, இயற்றப்பட்ட சட்டத்தை மற்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் விவாதிப்பது என்பது மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதாகும். தேசிய நாடாளுமன்றங்கள் மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்' என்றார்.
 முன்னதாக, மக்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பேசுகையில், "சிறந்த நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் முக்கிய சர்வதேச பிரச்னைகள் குறித்து பல்வேறு நாடுகளின் அரசுகள், மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்குரிய இடமாகவும் ஐபியு உள்ளது' என்றார்.
 நாடாளுமன்றங்களுக்கு இடையேயான இந்த ஒன்றியம் 1889-இல் தொடங்கப்பட்டது. இதில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் இந்தியா உள்ளிட்ட 179 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com