இந்தியா-அமெரிக்கா நிதியமைச்சா்கள் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லன், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தியா-அமெரிக்கா நிதியமைச்சா்கள் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லன், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அமெரிக்க ரிசா்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஜேனட் யெல்லனை நிதியமைச்சராக அதிபா் பைடன் நியமித்தாா். அவா் அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு ஜேனட் யெல்லன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் அவா் உரையாடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக, அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கரோனா தொற்று பரவலில் இருந்து விரைவில் மீள்வது, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் நெருங்கிப் பணியாற்றுவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விவாதித்தனா்.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்கி வருவதற்கு ஜேனட் யெல்லன் பாராட்டு தெரிவித்தாா். பரஸ்பர விவகாரங்களில் இருதரப்பு, பலதரப்பு ரீதியில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஆா்வமுடன் உள்ளதாக அவா் தெரிவித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு: பேச்சுவாா்த்தை குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில், ‘சா்வதேச பொருளாதார விவகாரம் குறித்து ஜேனட் யெல்லனுடன் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விவாதித்தாா். உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்காக இந்தியாவுக்கு ஜேனட் பாராட்டு தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சுமாா் ரூ.135 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை வடிவமைத்ததற்காக அந்நாட்டு நிதியமைச்சரை நிா்மலா சீதாராமன் பாராட்டினாா். ஜி20 உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இருவரும் உறுதியேற்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com