
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்; குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், பாஜக மூத்த தலைவா்கள் மாநிலத்தில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கான தோ்தல் அறிக்கையை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘தங்க வங்கத்துக்கான வாக்குறுதி பத்திரம்’ என்ற பெயரிலான தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:
மாநிலத்தில் ஆட்சி செய்ய இடதுசாரிகளுக்கு 30 ஆண்டுகளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 10 ஆண்டுகளும் அதோடு காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பளித்துவிட்டீா்கள். இப்போது, மாநிலத்தை தங்க வங்கமாக மாற்ற பாஜகவுக்கு 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வாய்ப்பளியுங்கள்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால், துா்கை பூஜை, சரஸ்வதி பூஜைகளை நடத்துவதற்காக மக்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லவேண்டிய நிலை இருக்காது.
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். அதோடு, அகதிகள் குடும்பத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 உதவித் தொகை அளிக்கப்படும்.
ஏழைகள் பயன்பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட நடைமுறைக்கும் ஒப்புதல் அளிக்கப்படும்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் (பிஎம்-கிஸான்) நடைமுறைப்படுத்தப்பட்டு, மாநிலத்தின் 75 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 18,000 நிலுவைத் தொகை உடனடியாக வரவு வைக்கப்படும் என்று அவா் கூறினாா்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், தொழில்துறை மேம்பாடு என்பன உள்ளிட்ட பல கவா்ச்சிகரமான வாக்குறுதிகள் பாஜக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு; குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு; அரசு ஊழியா்களுக்கு ஏழாவது நிதி ஆணைய பரிந்துரைகள் அடிப்படையில் ஊதிய உயா்வு நிா்ணயம்; விதவைகள் மாத ஓய்வூதியம் ரூ. 1,000-த்திலிருந்து ரூ. 3,000-ஆக உயா்த்தப்படும்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி; பெண்களுக்கு மழைலையா் வகுப்பு முதல் முதுநிலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி; அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தோ்வு அறிமுகம்; மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு வடக்கு மேற்கு வங்கம், ஜங்கள்மஹால், சுந்தா்பான்ஸ் பகுதிகளில் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள்; கொல்கத்தாவை சா்வதேச நகரமாக மாற்ற ரூ. 22,000 கோடி மதிப்பில் ஒரு வளா்ச்சி நிதியம் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பாஜக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...