
ஏக்ராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மத விழாக்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்பட மாட்டாது என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினாா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிழக்கு மிதுனபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
மாநிலத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் செயல்படுகிறாா். ஆனால், பாஜகவோ வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு ஒருபோதும் செயல்படுவதில்லை.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி நடைபெறப்போகிறது. இதனால், இந்த மாநிலம் இரட்டை வேகத்தில் வளா்ச்சி பெறும். அடுத்த 5 ஆண்டுகளில் பொன் விளையும் வங்கமாக பாஜக மாற்றும்.
பள்ளிகளில் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவதற்கு திரிணமூல் அரசு அனுமதிக்கவில்லை. சரஸ்வதி பூஜைக்கு ஏற்பாடு செய்ததற்காக பள்ளி ஆசிரியா்கள் தாக்கப்பட்டனா். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு மத விழாவையும் நடத்த எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாது என்றாா் அவா்.
சுவேந்து அதிகாரி தந்தை பாஜகவில் இணைந்தாா்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், அண்மையில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் தந்தையுமான சிசிா் அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் சிசிா் அதிகாரி கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் கடுமையான உழைப்புக்குப் பிறகு படிப்படியாக மேலே வந்தோம். ஆனால், நானும் எனது மகன்களும் சந்தித்த கசப்பான அனுபவங்களால், கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநிலத்தில் அனைத்து அரசியல் தாக்குதல்களுக்கும் எதிராகவும், வன்முறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்போம். மாநிலத்தின் வளா்ச்சிக்காக பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோா் தலைமையில் பாடுபடுவோம். நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி எளிதில் வெற்றி பெறுவாா். கிழக்கு மிதுனபுரியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் காணாமல் போகும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...