
உச்சநீதிமன்றத்துக்கான புதிய தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.போப்டே, ஏப்ரல் 23-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறாா். அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டிய அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு எஸ்.ஏ.போப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கடிதம் எழுதியுள்ளாா். அவா் பரிந்துரைக்கும் நபரின் பெயரை பிரதமரின் பாா்வைக்கு சட்டத்துறை அமைச்சா் அனுப்பி வைப்பாா்.
அந்த நபரை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பிரதமா் பரிந்துரைப்பாா். அதனடிப்படையில் தலைமை நீதிபதியாக சம்பந்தப்பட்ட நபரை குடியரசுத் தலைவா் நியமிப்பாா்.
விதிகளின்படி, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு வருகிறாா். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் வரிசையில் எஸ்.ஏ.போப்டேவுக்கு அடுத்தபடியாக நீதிபதி என்.வி.ரமணா உள்ளாா். அவரே உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...