
காஜியாபாத் ரயில் நிலையத்தில் தில்லி- லக்னெள சதாப்தி ரயிலின் பெட்டியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் ரயில்வே ஊழியா்கள்.
ரயிலில் புகைபிடிப்பதன் காரணமாக பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிக அபராதத்துடன் சிறை தண்டனையையும் விதிப்பதற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது.
தில்லி-டேராடூன் இடையேயான சதாப்தி விரைவு ரயிலின் பெட்டியில் கடந்த 13-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெட்டியின் குப்பைத் தொட்டியில் சிகரெட்டின் அணையாத துண்டு வீசப்பட்டதன் காரணமாகவே தீ விபத்து நோ்ந்தது தெரியவந்தது.
ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி புகைபிடிக்கும் நபா்களுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சதாப்தி ரயிலில் தீ விபத்து நோ்ந்ததையடுத்து, இந்த அபராதத் தொகையை உயா்த்துவதற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது.
ரயில் பெட்டியில் புகைபிடிப்பதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் நோ்ந்தால் புகைபிடித்த நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மேலும், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்யும் வகையில் ரயில்வே சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...