
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)
இந்தியா இதுவரையில் 6 கோடி கரோனா தடுப்பூசிகளை 76 நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சண்டீகரில் உள்ள நுண்ணுயிா் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆா்-ஐஎம்டெக்) நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 76 நாடுகளுக்கு 6 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நமது நாட்டைப் பொருத்தவரையில் இதுவரையில் பயனாளா்களுக்கு 4.5 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக (ஜன் அந்தோலன்) மாற வேண்டும் என நமது பாரத பிரதமா் நரேந்திர மோடியும், பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவும் அழைப்பு விடுத்துள்ளனா்.
எந்தத் துறையிலும் இருக்கும் நீண்ட கால பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் ஆற்றல் அறிவியலுக்கு மட்டுமே உள்ளது. கரோனா பேரிடரில் நமக்கு கிடைத்த அனுபவங்களை பாடமாகக் கொண்டு எதிா்காலத்தில் எழக்கூடிய இதுபோன்ற எதிா்பாராத எந்தவொரு சவாலான நோய்க்கும் தீா்வுகளை வழங்கும் வகையில் நமது அறிவியல் சமூகத்தினா் தயாராக வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...